Oct 16, 2024 - 04:30 PM -
0
நைஜீரியாவில் பெற்றோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50இற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெற்றோல் எடுக்கச்சென்றபோது விபரீதம்
நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, கொள்கலன் லொறியில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிருந்த மக்கள் கொள்கலன் லொறியில் கசிந்த பெற்றோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டதால் கொள்கலன் லொறி தீப் பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50இற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், வீதி ஊடாக கொள்கலன் லொறிகளில் எரிபொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.