செய்திகள்
"மலையகத்தில் காணி வழங்கல், வடக்கில் காணி விடுவிப்பு"

Oct 19, 2024 - 11:20 PM -

0

"மலையகத்தில் காணி வழங்கல், வடக்கில் காணி விடுவிப்பு"

மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய 'காணி உரிமை' உத்தரவாதங்களையும், வடகிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய 'காணி உரிமை' உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அநுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் வாக்குகளை கோரலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் கூறி உள்ளதாவது;  

 

"நாம் பங்காளிகளாக இருந்த நல்லாட்சியின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எமது கட்சிகளின் வலியுறுத்தல் காரணமான இராணுவம் வசம் இருந்த கணிசமான காணிகள் வடக்கில் விடுவிக்கபட்டன. பின்னர் ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் இந்த காணி விடுவிப்பு நின்று போனது. ஜனாதிபதி ரணிலின் இரண்டு வருட ஆட்சி காலத்தில் இதுபற்றி பேச பட்டது. ஆனால், காரியம் எதுவும் நடக்கவில்லை.

 

இன்று, போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இன்னமும் நிலை பெற்று இருக்கும் மேலதிக இராணுவ முகாம்களை மூடி, விடுவிக்க படாமல் எஞ்சி இருக்கின்ற தனியார் காணிகளை விடுவிப்பது  தொடர்பில் அநுர அரசின் கொள்கைதான் என்ன என்பது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  

 

மலையக தமிழர்களை காணி உரிமையை பிரதான அம்சமாக கொண்ட  விரிவான ஒரு சாசனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவுடன் செய்திருந்தோம். தூரதிஷ்டவசமாக அவர் வெற்றி பெறவில்லை. ஜனாதிபதி ரணிலின் இரண்டு வருட ஆட்சி காலத்தில் மலையக மக்களுக்கு காணி வழங்கல் பற்றி மீண்டும், மீண்டும் பேச பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 ஆனால், காரியம் நடக்கவில்லை. ஆனால், காணி உரிமையை சட்டப்படி  வழங்க வாய்ப்பு இருந்தும் தனது இரண்டு வருட ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அதை செய்ய ரணில் தவறி விட்டார்.

 

இன்று தோழர் அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இதுபற்றி மகிழ்ச்சியே. மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய காணி உரிமையை பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு வழங்குவது தொடர்பில், இன்று மலையகத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரும் அநுர அரசின் கொள்கைதான் என்ன என்பது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இதற்கான தெளிவான பதில்களையும் வழங்காமல், தமிழ் மக்களுக்கு எந்தவித உத்தரவாதங்களையும் தராமல், மறுபுறம் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் ஏறக்குறை 'போர் குற்றவாளிகள்' போல் விமர்சித்து கொண்டு, தமிழர்களிடம் வாக்கு கோரும் போக்கைதான் என்பிபி-ஜேவிபி ஆட்சியாளர்கள் தொடர போகின்றார்களா? என கேட்க விரும்புகிறேன்.

 

200 வருடங்களாக கொத்தடிமை வாழ்வு வாழும் பெருந்தோட்ட மக்கள் பற்றியும், கிளிநொச்சியில் வருடக்கணக்கில் போராடும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பற்றியும், அனுதாப வார்த்தைகளை அவ்வப்போது அள்ளி கொட்டுவது மாத்திரமே என்பிபி-ஜேவிபி ஆட்சியாளர்களின் கொள்கையாக இருக்க போகிறதா? எனவும் கேட்க விரும்புகிறேன்.

 

வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவர்களாக தம்மை காட்டிக்கொண்டு இருக்கும் நபர்களின் அனுதாப வார்த்தைகளோ, உபதேசங்களோ எமக்கு தேவையில்லை. நியாயம்தான் எமக்கு தேவை என்பதை கூறி வைக்கவும் விரும்புகிறேன்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05