செய்திகள்
பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Oct 21, 2024 - 09:34 AM -

0

பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் 09 டிப்போக்களுக்கு போலியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த டிப்போக்களின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு இடத்தில் திடீர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

அதன் பின்னர், குறித்த தரப்பினர் தாங்கள் வந்த வாகனத்தை சீர் செய்ய ஈசிகேஸ் முறை மூலம் அவசர தொகையாக 10,000 ரூபாயை அனுப்புமாறு கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சில சந்திர்ப்பங்களில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர்கள் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் அல்லது குறித்த இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது வேறு சில குறிப்பிட்ட நபர்களாக அறிமுகப்படுத்தி திட்டமிட்டு இந்த பண மோசடிகளை செய்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த தொலைபேசி எண்களை சரிபார்த்ததில், பல சந்தர்ப்பங்களில் அந்த எண்கள் இறந்த நபர்களின் பெயர்கள் அல்லது வெளிநாட்டில் உள்ளவர்களின் பெயர்களில் பெறப்பட்டவை என தெரியவந்துள்ளது.

 

இவர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இது திட்டமிட்ட செயல் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

எனவே, இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்தால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களைத் தொடர்பு கொண்டு, அழைப்பின் உண்மை மற்றும் பொய்யை சரிபார்த்துக் கொள்ளுமாறும், இவ்வாறான மோசடிச் செயல்களில் சிக்காமல் இருக்குமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05