Oct 21, 2024 - 01:30 PM -
0
பெண் வைத்தியரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த இருவரை தலங்கம குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் 43 வயதுடைய வைத்தியரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 23 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
45 வயதுடைய சந்தேகநபர் வீட்டிற்கு வெளியில் தங்கியிருந்த நிலையில் மற்றைய சந்தேக நபர் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்து வைத்தியரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது தங்க நெக்லஸ் மற்றும் ஏனைய தங்கப் பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 7 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது அயலவர் ஒருவரால் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டதோடு, இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று (20) தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (21) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.