Oct 21, 2024 - 03:03 PM -
0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்.
கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டை திறந்து பார்த்தபோது குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரிலிருந்த தங்க பையைத் திருடி மட்டக்களப்பு நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் இரண்டு இலட்சத்தி 60,000 ரூபா விற்பனை செய்த குறித்த சம்பவத்தில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த ஏரிஎம் அட்டையை கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சற்று அருகிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் 13,000 ரூபாவுக்கு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது, வீட்டு உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி ஊடாகவே குறித்த சம்பவத்தை அறிய முடிந்துள்ளது.
மேற்படி பல்பொருள் விற்பனை நிலைய சிசிடிவி கமராவை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்றை சேர்ந்த 21 வயதுடைய குறித்த நபர் அவரது மனைவியுடன் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, திருடப்பட்ட நகையை நகைக்கடையில் விற்பனை செய்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் 105,000 ரூபா பணம் ஏரிஎம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.