Oct 22, 2024 - 06:23 PM -
0
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன் என ஐனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
டயகம பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியினூடாக மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன். பல எதிர் தரப்பினர் நான் கடந்த முறை தேர்தல் கேட்டுவிட்டு ஓடி ஒழிந்துவிட்டேன் எனக் கூறுகின்றனர். ஆனால், அப்படியல்ல. நான் ஓடவும் இல்லை. ஒழியவுமில்லை. இதே மலையகத்தில் தலைவாக்கலையில் தான் இருக்கிறேன்.
என்னுடைய தந்தை 1989 ஆம் ஆண்டு தேர்தல் கேட்டபோது தோல்வி அடைந்தார். முதலில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. ஆரம்பகால உறுப்பினர்களுக்கு அது தெரியும். 1994 ஆம் ஆண்டு வரை அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் அதற்கு காரணம் அரசியல் பழிவாங்கல்.
ஒருவர் மலையகத்தில் புதிதாக உருவாக நினைத்தால் அவரை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவார்கள். நான் கடந்த முறை தேர்தல் கேட்ட பிறகு எனக்கும் நிறைய அரசியல் பழிவாங்கல்கள் நடந்தன.
நமக்கு வேலை செய்தவர்களை பழிவாங்கினார்கள். அதனால் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அரசியலில் சில நேரங்களில் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அதை தான் நானும் செய்தேன்.
நான் பதுங்கி இருந்தது பாராளுமன்றத் தேர்தல் எப்போது வரும் அதில் பாய வேண்டும் என்று நான் பதுங்கி இருந்தேன்.
நான் எங்கே சென்றேன் என்று கேட்பவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள். என்ன செய்து கொடுத்தார்கள் இந்த ஐந்து வருடத்தில் அவர்கள் செய்த மாற்றம் என்ன? மலையகத்துக்கு செய்த சேவைகள் என்ன? அதே விடயம் தான் இன்னும் இருக்கிறது. எந்த மாற்றமும் நடக்கவில்லை.
பழைய உறுப்பினர்களை நம்பி நம்பி ஏமாற்றமடைந்தது போதும். நமக்கு ஒரு புதிய பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பழைய உறுப்பினர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. எந்த சேவைகளும் செய்யவும் இல்லை என தெரிவித்தார்.
--