மலையகம்
சிலர் சுயநல அரசியலுக்காக போட்டியிடுகின்றனர்!

Oct 24, 2024 - 06:51 PM -

0

சிலர் சுயநல அரசியலுக்காக போட்டியிடுகின்றனர்!

பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. 

 

எனவே, அந்த உயரிய பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

 

பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை சர்வமத வழிபாடுகளுடன் பாரத் அருள்சாமி இன்று (24) ஆரம்பித்தார்.

 

இவருடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் விஷ்வா, செயற்குழு உறுப்பினர்களான குலேந்திரன், கலாதாரன், உமா மகேஸ்வரி, கிருஷ்னா விஜேந்திரன், சேகர் என பலரும் கலந்துக் கொண்டனர்.

 

பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அதற்கான பிரசாரத்தை இன்று இறையாசியுடன் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன்.

 

கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவதற்குரிய விதையை 2010 ஆம் ஆண்டு எமது தலைவர் மனோ கணேசன் விதைத்தார். அந்த விதை மூலம் 2015 இல் அறுவடை கிடைத்தது. ஆனால் இன்று தமிழ்ப் பிரதிநிதித்துவம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

 

எனவே தான் கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தலைவர் மனோ கணேசனின் நேரடி வழிகாட்டலுடன் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நிச்சயம் மக்கள் ஆணை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்குரிய கண்டியில் அரசியல் சூழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்.

 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது நல்ல விடயம். அவ்வாறு நடந்தால் பாராளுமன்ற ஆட்சி முறைமை உருவாக்கப்படும்.

 

முழு அதிகாரமும் பாராளுமன்றம் வசம் இருக்கும். எனவே, எமது கண்டி மண்ணுக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயமாக அமையும். தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பி வைப்பார்கள்.

 

பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்கள் எமக்கு வழங்கும் பதவி. அது தனிநபருக்குரிய சொத்து அல்ல. அந்த பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட மக்கள் தீர்மானித்துவிட்டனர். 

 

தமிழ் மக்களின் பிரதிநிதியாக மட்டுமல்ல கண்டியில் வாழும் அனைத்து மக்களினதும் குரலாக நான் ஒலிப்பேன் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05