Oct 25, 2024 - 11:23 AM -
0
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று (24) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது. சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்தை திணறடித்தனர்.
அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. கான்வே 76 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில், அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை பெற்ற பந்து வீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் நாதன் லயனை (129 போட்டியில் 530 விக்கெட்) முந்தி 7 ஆவது இடம் பிடித்தார்.
அஸ்வின் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 531 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் வார்னே 2 ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஆண்டர்சன் 3ஆவது இடத்திலும், இந்தியாவின் கும்ளே 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.