Oct 30, 2024 - 04:24 PM -
0
இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கூடிய புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபையின் தீர்மானத்திற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதேவேளை, புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளருடனான கலந்துரையாடலும் தோல்வியடைந்ததாக சுமேத சோமரத்ன நேற்று (29) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.