உலகம்
ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

Oct 30, 2024 - 06:50 PM -

0

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 

 

பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

 

இந்நிலையில், இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு இந்த மாத தொடக்கத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது.  நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

இதற்கு இஸ்ரேல் பதிலடி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாத இறுதியில், கடந்த சனிக்கிழமையன்று, ஈரானின் ராணுவ இலக்குகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி தளங்கள் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதலை தொடுத்தன.  

 

இதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக பதில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.இதுபற்றி இஸ்ரேலின் ராணுவ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி இன்று கூறும்போது, இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

எங்களுக்கு ஈரானை எப்படி அணுக வேண்டும் என தெரியும்.  இந்த முறை நாங்கள் மிக திறமையாக ஈரானை அடைந்து, நாங்கள் தாக்காமல் விட்டு வைத்த இடங்களை அதிக திறனுடன் கடுமையாக தாக்குவோம் என்று ராணுவ அதிகாரிகளின் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.

 

ஈரானில் உள்ள சில இடங்களை தாக்குவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  ஏனெனில், இதன் மீது நாம் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும்.  இந்த விடயம் இதனுடன் முடிந்து விடவில்லை.  தாக்குதலின் மத்தியிலேயே நாம் இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05