Oct 30, 2024 - 08:10 PM -
0
திருகோணமலை, கிண்ணியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான மொஹமட் நஸ்மி மற்றும் பாதிமா பாசீஹா தம்பதியினரின் 4 வயது மகனான மொஹமட் அக்லாம் பிலால் கணித அடுக்குகளின் விதிகள் (Low of Exponents)முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியில் கூறி சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் சுயந்தன் விக்னேஸ்வர ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் மொஹமட் பர்சான் ஆகியோர் உலக சாதனையை உறுதி செய்து சாதனை புரிந்த சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களுடன் இணைந்து வழங்கிப் பாராட்டினார்கள்.
இந்நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.
இந்த நிகழ்வினை கதிரவன் இன்பராசா அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க கின்னியா பிரதேச செயலாளர் திரு.மொஹமட் கனி அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கு கொண்டார்.
கிண்ணியா வளையக்கல்வி பணிப்பாளர் முனவ்வரா, கிண்ணியா மத்திய கல்லூரியின் அதிபர் நஜாத்,கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சமீம் மற்றும் குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.
விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஹூஸைன், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் அதிபர் முனவ்பர், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் நஸீரா நஜாத் போன்றோர் விருந்தினர்களாகப் பங்கு கொண்டனர்.
இந்தியாவில் இருந்து நேரலையில் நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் சிறப்பு நடுவர் சிவ ஷங்கரன் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தினார்கள்.