செய்திகள்
டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐவர் மீது குற்றச்சாட்டு

Nov 3, 2024 - 09:46 PM -

0

டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐவர் மீது குற்றச்சாட்டு

சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என பாரிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன நேற்று (02) தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.

 

டட்லி சிறிசேன உள்ளிட்ட ஐந்து பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே இந்த அரிசி நெருக்கடியை அவ்வப்போது ஏற்படுத்தி வருவதாக அவர் இன்று (03) குற்றம்சாட்டினார்.

 

கடந்த காலங்களில் சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யப்பட்டதுடன் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடும் காணப்பட்டது.

 

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களை அழைத்து கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு அறிவித்ததுடன் அவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

 

ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு நீங்கவில்லை எனவும், அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்கப்படுவதில்லை என்றும் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதேவேளை, நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பில் அத தெரண வினவிய போது, ​​நெல் கையிருப்பு தொடர்பான தரவு அறிக்கை இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நவம்பர் மாதம் 06 ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05