மலையகம்
சம்பளமாக 2,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

Nov 5, 2024 - 12:42 PM -

0

சம்பளமாக 2,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியது போல நாள் சம்பளமாக 2,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

 

நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் நேற்று (04) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாம் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்தோம். அடிப்படை நாள் சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்பட்டது. எஞ்சிய 350 ரூபாவுக்கு கம்பனி தரப்பில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஆண்கள் 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும், மேலதிக கொழுந்து என பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நாம் ஏற்கவில்லை.

 

ஜனாதிபதி நுவரெலியாவுக்கு வந்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு நன்றி. ஜே.வி.பியினரின் தொழிற்சங்க உறுப்பினர்கள் 2,000 சம்பளம் வேண்டும் என அன்று கூறினார்கள். எனவே, அந்த தொகையை பெற்றுக் கொடுத்தால் நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

 

நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பிரதிநிதிகளையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் நாமே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

 

கல்வி புரட்சி மூலமே நாம் இலகுவில் சமூக மாற்றத்தை முன்னோக்கி செல்ல முடியும். அதனால் தான் கல்வித்துறைக்கும், பாடசாலைக்கும் கூடுதல் நிதிகளை ஒதுக்கி, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம். எமது சமூகத்தின் வளர்ச்சி கல்வியில்தான் தங்கியுள்ளது. எனவே கல்வியில் நம்மவர்கள் உயர்ந்தால் நிச்சயம் சமூக மாற்றமும் வரும்.

 

நுவரெலியா மாவட்டத்தில் பல சுயேச்சைக்குழுக்கள் வந்துள்ளன. இதனால் வாக்குகள் சிதறக்கூடும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு சிக்கல் வரலாம். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05