Nov 5, 2024 - 05:31 PM -
0
யாழ். தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள். கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் 01 ஆம் மற்றும் 09 ஆம் இலக்கங்களில் வேட்பாளர்களாக போட்டியிடும் அற்புதலிங்கம் விஷ்கரன் மற்றும் செல்வநாயம் ரசிகரன் ஆகியோரை ஆதரித்து காரைதீவு கிராமிய குழு மற்றும் கிராம பொது அமைப்புகளால் நேற்று (04) மாலை ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை பாராளுமன்றப் பொது தேர்தலில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோய்விடக் கூடாது என்பதனால் கடந்த காலங்களில் இங்கு போட்டியிடுவதிலிருந்து நாம் விலகியிருந்தோம்.
கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம். மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் நாம் ஆழ வேரூன்றி அகல கால் பதித்துள்ளோம். அங்கே நடந்துள்ள அபிவிருத்திப் பணிகளைப் போன்று அம்பாறை மக்களுக்காகவும் எதிர்காலத்தில் எம்மால் செய்ய முடியும்.
கடந்த தேர்தலில் தோல்வி கண்ட அந்த போலித் தமிழ் தேசியவாதிகள் அம்பாறை மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்தலில் அம்பாறையில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
ஆனால் ஒன்றுக்கு இரண்டாக வந்து இங்கே வீடென்றும் சங்கென்றும் பிரித்து நின்று அம்பாறை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துணிந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் வெல்லப்போவதில்லை. கடந்த தேர்தல்களில் ஒன்றாக நின்றபோதே அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.
ஆனால் தற்போது எப்படியாவது ஆயிரம், இரண்டாயிரம் என்று சேகரித்த அவ்வாக்குகளால் தங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை பெற்றுக்கொள்வதே அவர்களது தந்திரமான நோக்கமாகும். யாழ். தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள் என தெரிவித்தார்.
--