Nov 5, 2024 - 06:57 PM -
0
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தில் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட வேளையில், அதிரடிப் படையினரின் பதில் தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தில் எந்தவொரு நபர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு ஆதாரம் இல்லை என இன்று (05) சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலபிட்டிய பண்டரவத்தை ஆசிரியர் கல்லூரி விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அடையாளம் காட்டச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி காலி வீதியில் உள்ள அஹுங்கல்லவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முன்பாக காரில் வந்த சிலர் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் கொலம்பகேவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து நீதிவான் சட்டமா அதிபரிடம் கேட்டறிந்தார்.
இதன்படி, சட்டமா அதிபர் கடிதம் மூலம் மேற்கண்ட விளக்கத்தை நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, விசாரணை நடவடிக்கை டிசம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த மகேஷ் இந்திக்க என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பரிசோதகர் கொலம்பகேவுக்கு எதிராக உயிரிழந்த சந்தேக நபரின் உறவினர்கள் வழக்குத் தாக்கல் செய்ததோடு, தனது உறவினரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.