Nov 6, 2024 - 10:05 AM -
0
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. ஏனைய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
ஏலத்திற்கான இடமாக சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களை பரிசீலனை செய்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இறுதியில் சவூதியின் துறைமுக நகரான ஜெட்டாவை தேர்வு செய்துள்ளது.
இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஏலத்திற்கு 1,165 இந்தியர்கள், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவர்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென்னாபிரிக்காவில் இருந்து 91 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்திற்கு முன்பாக இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் இன்றி 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டியுள்ளது.