Nov 8, 2024 - 12:36 PM -
0
மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்புக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி ஆடிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அல்சாரி ஜோசப் அணித்தலைவர் ஷாய் ஹோப் உடன் மோதலில் ஈடுபட்டு இருந்தார்.
தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் அந்தப் போட்டியின் நான்காவது ஓவர் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் ஆறாவது ஓவரின் போது மீண்டும் களத்துக்கு வந்தார். அதனால், ஐந்தாவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வியைாடியது. இதனால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் கடும் விமர்சனத்தையும் சந்தித்து இருந்தது. அல்சாரி ஜோசப் செய்தது தவறு என ரசிகர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர். இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை அல்சாரி ஜோசப் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபையின் தொழில்முறை தர்மத்தை அல்சாரி ஜோசப் கடை பிடிக்கவில்லை எனவும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட்டின் நன்மதிப்புகளை காக்கும் வகையில் அவர் நடந்து கொள்ளவில்லை எனவும், இது போன்ற மோசமான நடவடிக்கையை நாம் அப்படியே விட்டுவிட முடியாது என்பதால் அந்த சம்பவத்தின் அழுத்தத்தை உணர்ந்து அவருக்கு இரண்டு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படுகிறது என அறிவித்து இருக்கிறது.
அல்சாரி ஜோசப் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவரது மன்னிப்பு அறிக்கையில், "போட்டியின் மீதான எனது ஆர்வம் என்னை மிஞ்சிவிட்டது. நான் அணித்தலைவர் ஷாய் ஹோப் மற்றும் சக வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன். அணி நிர்வாகத்திடமும் மன்னிப்பு கேட்டேன். மேற்கிந்திய தீவுகள் ரசிகர்களிடமும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். ஒரு சிறிய தவறான மதிப்பீடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன். என்னால் நடந்த ஏமாற்றத்துக்காக நான் வருந்துகிறேன்." என்று கூறி இருக்கிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. ஒருவேளை மேற்கிந்திய தீவுகள் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் இந்த சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும்.