Nov 11, 2024 - 01:59 PM -
0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான டொயோட்டா லாண்ட் குரூஸர் V8 ரக சொகுசு ஜீப் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதற்கமைய, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர், சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் சொகுசு கார் இருப்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வீடு குறித்து தகவல் அறிந்ததும், சந்தேகத்திற்கிடமான கார் இருப்பதை உறுதி செய்த விசாரணை அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவருடன் அந்த வீட்டிற்கு சென்று காரை சோதனையிட்டதாக தெரிவித்தனர்.
இந்த ஜீப் 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.