Nov 13, 2024 - 08:39 PM -
0
சுங்க அதிகாரிகள் தமது கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 7ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது கொள்கலன் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் எமது அதிகாரிகள் தொடர்பில் முன்வைத்த பொய்யான கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமது கடமைகள் தொடர்பான பணிகளை மாத்திரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.
இதனால், கொள்கலன்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது தேர்தல் காலப்பகுதி என்பதால் கொள்கலன் வாகனங்கள் தரித்து நிற்க வேண்டி வந்தால் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் வாக்களிக்க முடியாமல் போகும் என்பதை கவனத்தில் கொண்டு கடமை தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.