செய்திகள்
மொட்டு கட்சி காரியாலயம் மீது தாக்குதல்!

Nov 16, 2024 - 10:01 PM -

0

மொட்டு கட்சி காரியாலயம் மீது தாக்குதல்!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலினால் அலுவலகம் பலத்தை சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு காத்தான்குடி  பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை  தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் அமைந்திருந்த மேற்படி தேர்தல் அலுவலகத்தின் மீது நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அலுவலகத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

 

பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத்தில் போட்டியிட்ட எம் ஐ அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கு சொந்தமான இந்த அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

தாக்குதல் காரணமாக அலுவலகத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் அங்கு கட்டப்பட்டிருந்த விளம்பர பதாதைகளும் தாக்குதல் நடத்தியவர்களினால் அளிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

 

தாக்குதல் நடந்த சம்பவ நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை என்பதினால் உயிராபத்துக்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

 

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05