Nov 17, 2024 - 09:23 PM -
0
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக இன்று (17) இலங்கை வந்துள்ளது.
இவர்களின் விஜயத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை கடன் வசதி இலங்கைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் மொத்த கடன் தொகை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர் 2023 மார்ச் 21ஆம் திகதியும், இரண்டாவது தவணையாக 337 மில்லியன் அமெரிக்க டொலர் அதே வருடம் டிசம்பர் 13 ஆம் திகதியும் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டது.
மூன்றாவது கடன் தவணையாக இவ்வருடம் ஜூன் மாதம் 12 ஆம் திகதி 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதுடன், இதுவரையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு கடன் தவணையின் பின்னரும் முன்னேற்றம் பற்றிய மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கமைவாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பணித் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மூன்றாவது மீளாய்வுக்காக இன்று (17) இலங்கைக்கு வந்திருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான தனது நான்காவது கடன் தவணையை விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.