செய்திகள்
நகர சபை ஊழியரை கொலை செய்த சந்தேகநபர்கள் கைது!

Nov 19, 2024 - 12:24 PM -

0

நகர சபை ஊழியரை கொலை செய்த சந்தேகநபர்கள் கைது!

தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் 46 வயதுடைய அநுர கொஸ்தா என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

 

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், சந்தேகநபர்கள் சுட வந்த மோட்டார் சைக்கிள் என்பன பல பாகங்களாக பிரித்து வேறாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இக்கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (18) ஹோமாகம பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கைது செய்தனர்.

 

இதன்போது, அவரது சூட்கேஸில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

 

இதன்படி, சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், கொலைக்காக மோட்டார் சைக்கிளில் சந்தேக நபருடன் வந்த மற்றைய நபர் அத்துகிரிய மொரட்டுவாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ​​மோட்டார் சைக்கிள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பாதுக்க பிரதேசத்தில் உள்ள விமானப்படை வீரர் தங்கியிருந்த வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட அசங்க மற்றும் அசந்த குமார் என்ற லெடா ஆகியோர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட விமானப்படை வீரர் ஹந்தபாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05