Nov 19, 2024 - 01:52 PM -
0
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கந்தசாமி தெட்சணாமூர்த்தி நேற்று (17) இரவு சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது 58 வயதாகும்.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், யாழ். மத்திய கல்லூரியில் சாதாரண தரம் வரையும் கல்வி கற்ற இவர், சாதாரண தரப்பரீட்சை எழுதி முடித்த பின்னர் மறைமுக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர், இளம் வயதில் சுதந்திரக்கட்சி ஊடாக ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு ஒரு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், அந்த சபையின் உப தலைவராகவும், இரண்டு தடவைகள் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் அரசியல் அனுபவத்தைக் கொண்ட இவர், உடப்பு கிராமத்தின் அபிவிருத்தி எழுச்சிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணிவந்த இவர், உடப்பு கிராமத்தில் மஹிந்த கிராமம் ஒன்றை அங்கு உருவாக்கி 159 வீடுகளையும் நிர்மாணித்துக்கொடுத்துள்ளார்.
மேலும், உடப்பு அறுவாய் பாலம், பிங்கட்டிய பாலம் என பல்வேறு சிறிய, பெரிய பாலங்களையும், உள்வீதி மற்றும் பிரதான வீதிகள் என்பனவும் இவரின் காலத்திலேயே அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், உடப்பு பகுதி கிராம மக்களுக்கு குடிநீர்த் திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், முறையான வீதியொர வடிகாலமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கு தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்குவதற்கும் இவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார்.
மேலும், உடப்பு கிராமத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடலரிப்பினை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மீனவர் இறங்குதுறை ஒன்றிற்கான தேவை குறித்தும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.
ஒரு பிரதேச சபையின் தலைவராக இருந்து கொண்டு தேசிய அரசியல்வாதிகளுடனும், அமைச்சர்களுடனும் நல்லுறவை பேணி அதன்மூலம் உடப்பு கிராமத்தில் மாத்திரமின்றி, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்குற்பட்ட பல கிராமங்களில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பாரிய அபிவிருத்திப் பணிகளையும் கந்தசாமி தெட்சணாமூர்த்தி முன்னெடுத்து, மூவின மக்களின் ஆதரவினைப் பெற்றுள்ளார்.
உடப்பு இந்து ஆலய திருப்பணி சபையின் முன்னாள் தலைவரான இவர், ஓய்வுபெற்ற அதிபர் தயானந்தியின் கணவரும், உடப்பு கிராம சபை தலைவர் பூவையா கந்தசாமியின் மகனுமாவார்.
--