வடக்கு
மன்னாரில் தொடர் மழை - 7,778 நபர்கள் பாதிப்பு!

Nov 23, 2024 - 07:30 PM -

0

மன்னாரில் தொடர் மழை - 7,778 நபர்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (22) இரவு முதல் இன்று (23) மதியம் வரை பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

 

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேச மக்கள் அதிகமாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

 

குறித்த பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி உள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த மழை வெள்ளத்தினால் முதியவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் எனப்பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த வெள்ள அனர்த்தத்தால் 2045 குடும்பங்களை சேர்ந்த 7,778 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. 200 குடும்பங்களை சேர்ந்த 774 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

 

107 குடும்பங்களை சேர்ந்த 351 பேர் பாதுகாப்பான 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் க.திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து நிலமையை ஆராய்ந்து வருகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05