Nov 24, 2024 - 08:12 PM -
0
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (25) தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 30-40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.