Nov 27, 2024 - 05:28 PM -
0
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழையுடன் தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மழையுடன் கடும் குளிரும் நிலவுகின்றதால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் நுவரெலியா மாநாகரசபை எல்லைக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் பெருந்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும் வீதிகளில் நீர் நிரம்பி செல்வதனால் நடந்த செல்ல முடியாமல் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கடும் மழை காரணமாக பம்பரகலை தோட்டத்தில் பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 193 குடும்பங்களை சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 98 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் மூன்று தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
மேலும் நுவரெலியாவில் இன்றும் (27) தொடர்ச்சியாக அதிக மழை பெய்து வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களுக்கும் தேவையான தற்காலிக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திரட்டி வருவதோடு, அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.