Nov 28, 2024 - 04:45 PM -
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 15,900 குடும்பங்களை சேர்ந்த 40,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களை சேர்ந்த 7,241 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பெருமளவான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன்போது வீடுகளில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக மக்கள் பாதுகாக்காப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருமளவான பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதன் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் இடைத்தங்கல் முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சதாகரன் உட்பட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
இதன்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கல் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், தற்போது வெள்ள நீர் வழிந்தோடிவருவதன் காரணமாக மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பிவருவதாக தெரிவித்தார்.