Nov 30, 2024 - 05:31 PM -
0
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 233 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியுள்ளது.
இன்றைய நான்காவது நாளில் 516 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிவந்த இலங்கை அணி 282 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அதற்கமைய, போட்டியின் மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாரிக்கா அணி 5 விக்கெட்டுக்களுக்கு 366 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அதன்படி, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 516 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்த 282 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக தினேஸ் சந்திமால் 83 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் ஊடாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.