Nov 30, 2024 - 05:57 PM -
0
மஹரகம, பமுணுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுபுன் சுலோகன அகலங்க என்ற ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் ஜனாதிபதி செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுணுவ நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, புதிய வைத்தியசாலை நோக்கிச் சென்ற சொகுசு ஜீப் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவு வீதியில் வலஹந்துவ ஜனாதிபதி மகளிர் கல்லூரிக்கு அருகில் இன்று (30) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர்.
நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த காரில் 4 பேர் இருந்ததாகவும், பின் இருக்கையில் இருந்த பெண்ணும் அவரது மகளும் காயமடைந்தனர்.
விபத்துக்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த கார் அருகில் இருந்த பாறையில் மோதியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

