மலையகம்
சுற்றுலாப் பயணியை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

Dec 6, 2024 - 03:34 PM -

0

சுற்றுலாப் பயணியை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

கொழும்பு கோட்டையில் இருந்து டிசம்பர் 04 ஆம் திகதி எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 36 வயதான ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி, ரயில் கதவு பகுதியில் இருந்தவாறு தனது தொலைபேசி மூலம் வீடியோ எடுத்துக்கொண்டு பயணித்துள்ளார்.

 

ரயில் வீதிக்கு அருகில் இருந்த இரு இளைஞர்கள் தனது கையை தடியால் தாக்கினர் எனவும், இதனையடுத்து 5 லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கீழே விழுந்துள்ளது எனவும், தனது தலைபகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த பெண் எல்ல சுற்றுலா பொலிஸில் முறையிட்டுள்ளார்.

 

ஹட்டனுக்கும், வட்டவளைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் வட்டவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை வேட்டையை முன்னெடுத்த பொலிஸார் அன்று இரவு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

 

வட்டவளை பொலிஸ் நிலையத்தக்கு நேற்று வந்த பாதிக்கப்பட்ட பெண் தனது கையடக்க தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ளார். விரைவாக செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுத்த பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05