Dec 7, 2024 - 10:02 PM -
0
தேங்காய் விலையே தற்போது சந்தையில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக அரசாங்கத்தின் தலையீடும் இதற்கு தேவையாகி உள்ளது.
வரலாற்றில் இருந்து நமது உணவோடு இணைந்த தேங்காயின் விலை உயர்ந்தது எவ்வாறு?
இது தொடர்பில் 'அத தெரண விசேட ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.
தேங்காய்ப் பால் இலங்கையர்களின் நாளாந்த உணவின் ஒரு அங்கமாகும்.
அதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய்ப்பால் உணவு தயாரிக்கப் பயன்படுகிறது, மேலும் இந்நாட்டில் ஆண்டுதோறும் தேங்காய் நுகர்வு 1800 மில்லியன் தேங்காய்களாகும்.
அதன்படி, ஒருவர் வருடமொன்றுக்கு சராசரியாக 105 தேங்காய்களை உணவுக்காக பெற்றுக்கொள்கிறார்.
உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்காக எதிர்பார்க்கப்படும் வருடாந்த தேங்காய் அறுவடை 3 பில்லியன் ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு தென்னை அறுவடை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்?
தென்னை உற்பத்தி குறைவதற்கான முக்கிய காரணங்கள் விலங்குகள் சேதம், காலநிலை மாற்றம், பூச்சி சேதம் மற்றும் உரங்களின் பயன்பாடு குறைவு.
இவற்றில் குரங்குகள், அணில், வண்டுகள் போன்ற விலங்குகளால் தென்னந்தோப்புக்கு அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தென்னை சாகுபடியின் மொத்த பரப்பளவு 400,000 ஹெக்டேருக்கு மேல் உள்ளது, இதில் 20 சதவீத நிலம் விலங்குகளால் சேதமடைந்துள்ளன.
குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் காட்டு விலங்குகளினால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாகும்.
சிவப்பு வண்டு, கருப்பு வண்டு மற்றும் வெள்ளை ஈ சேதம் மற்றும் பூச்சி சேதம் தென்னை தோட்டங்களின் உற்பத்தித்திறனை 10% முதல் -15% வரை பாதித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே, இதனால் வருடாந்தம் 200 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் இழக்கப்படுவதாக தெரிவித்தார்.