Dec 8, 2024 - 11:33 AM -
0
இந்திய அரசாங்கத்தின் ஊடாக உதவிப் பொருட்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதி மக்களுக்கு நேற்று (07) மதியம் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் உதவி திட்டத்தினூடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மற்றும் பெட் சீட் போன்றன வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மன்னார் துள்ளு குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 8. கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 461 குடும்பங்களுக்கு துள்ளு குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் குறித்த உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உதவி பொருட்கள் மன்னார் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1,655 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.
துள்ளு குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி உட்பட யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதி கிராம அலுவலர் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தனர்.
--

