Dec 8, 2024 - 03:19 PM -
0
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து உள்ளது. இதை அடுத்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அவுஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்து உள்ளது. இந்திய அணி பெரும் சரிவை சந்தித்து உள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற பின் இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் இருந்தது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் இருந்தது.
இந்த நிலையில் அடிலெய்டில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.
இதன் மூலம் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடமும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. தற்போது இந்தியா 61.1 என்ற வெற்றி சதவிகிதத்தில் இருந்து 57.29 என்ற வெற்றி சதவிகிதத்துக்கு சரிந்து உள்ளது. அதே சமயம் அவுஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் 60.71 என்ற வெற்றி சதவிகிதத்துடன் முதல் இடத்தை பெற்று உள்ளது.
தென்னாப்பிரிக்கா தற்போது 59.26 என்ற வெற்றி சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சிக்கல் இன்றி தகுதி பெற முடியும்.
ஒரு வேளை இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில், இரண்டில் வென்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால், அதன் பின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்திய அணிக்கு இறுதி போட்டிக்கான வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.