Dec 12, 2024 - 06:30 PM -
0
கடந்த வருடம் இடம்பெற்ற Peace Corps நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்று ரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க Peace Corps தன்னார்வலர்கள் இன்று (12) கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆழமடையும் அமெரிக்க இலங்கை பங்காண்மை மற்றும் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றம் தொடர்பான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவுசெய்துள்ளது.
இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக அவர்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றுவர்.
இவ்வைபவத்தில் உரையாற்றுகையில்,
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தன்னார்வலர்கள் பெற்றுக்கொண்ட மனதைக்கவரும் முன்னேற்றம், அவர்களது தகவமைப்புத்திறன் மற்றும் சேவையாற்றுவதில் அவர்கள் கொண்டுள்ள ஆழமான ஈடுபாடு ஆகியவற்றை மெச்சிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், “மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் சாரத்திற்கான ஒரு உதாரணமாக Peace Corps நிகழ்ச்சித்திட்டம் விளங்குகிறது.
இளையோர்களில் முதலீடு செய்வதிலும் எமது எதிர்கால பங்காண்மையினை வலுப்படுத்துவதிலும் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை இத்தன்னார்வலர்கள் பிரதிபலிக்கின்றனர்.
இலங்கையிலுள்ள சமூகங்களுடன் கைகோர்த்துச் செயற்படுவதன் மூலம், கல்வி முன்னேற்றத்திற்கும், பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கும் இத்தன்னார்வலர்கள் பணியாற்றுவதுடன், இரு நாடுகளிலுமுள்ள இளைஞர்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு உதவிசெய்யும் பாலங்களைக்
கட்டமைப்பதற்கும் அவர்கள் உதவுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்த கல்வியமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான திருமதி நிமாலி பதுரலிய, “Peace Corps உடனான எமது ஒத்துழைப்பானது அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆங்கிலமொழிக் கல்வியை மேம்படுத்துகிறது. எமது பாடசாலைகளுக்கும் சமூகங்களுக்கும் சேவையாற்றுகையில் தமக்கு முன்னாலுள்ள வளமான கலாச்சாரப் பரிமாற்ற வாய்ப்புகளைத் தழுவிக்கொள்ளுமாறு நான் இத்தன்னார்வலர்களை ஊக்குவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
கல்வியமைச்சினைச் சேர்ந்த மேலதிக செயலாளர் கலாநிதி நிஷாத் ஹந்துன் பத்திரனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.
1962 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Peace Corps நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையில் ஒரு மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு வரை கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 500 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு, குறிப்பாக கிராமப்புற பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கல்வியில் கவனம் செலுத்தி, 2018 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக இந்நிகழ்ச்சித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் Peace Corps பற்றி: கல்வி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கையிலுள்ள பல்வேறு சமூகங்களுடன் இணைந்து Peace Corps தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர். 1962 முதல் 1998ஆம் ஆண்டு வரை இலங்கையில் Peace Corps மேற்கொண்ட பணிகளில் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்காக இலங்கை இளையோர்களுக்குப் பயிற்சியளித்த மாவட்ட ஆங்கிலமொழி கற்றல் மேம்பாட்டு நிலையங்கள் (DELIC) நிகழ்ச்சித் திட்டம் போன்ற குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளடங்குகின்றன.
இந்நிகழ்ச்சித்திட்டமானது 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையானது கல்வியை வலுப்படுத்துவதற்கும் பரஸ்பர புரிதலை பேணிவளர்ப்பதற்குமான எமது உறுதிப்பாட்டை மீளவலியுறுத்தியது.
Peace Corps பற்றி, 1961ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட Peace Corps ஆனது உலக அமைதி மற்றும் நட்பு எனும் தனது செயற்பணியினை முன்னேற்றுவதற்காக உலகம் முழுவதுமுள்ள 144 நாடுகளில் 240,000 மேற்பட்ட தன்னார்வலர்களை இதுவரை சேவையிலீடுபடுத்தியுள்ளது.
கலாச்சாரங்களுக்கிடையிலான புரிதலை உருவாக்கி உலகளாவிய தலைமைத்துவத்தை பேணிவளர்க்கும் அதேவேளை, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம் உட்பட பல்வேறு விடயங்களில் உள்நாட்டில் முன்னுரிமையளிக்கப்பட்ட செயற்திட்டங்களில் அதன் தன்னார்வலர்கள் தாம் சேவையாற்றும் புரவலர் நாடுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள்.