Dec 13, 2024 - 03:30 PM -
0
Leadership in Energy and Environmental Design (LEED®)எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம், நிலைபேறான தன்மை எனும் சாதனைக்கான உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் பெறும் இலங்கையின் 50ஆவது கட்டிடமாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் LEED பசுமைக் கட்டிடம் எனும் நிகழ்ச்சித் திட்டமானது, ஆற்றல் வினைத்திறன், நீர் முகாமைத்துவம், வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை அங்கீகரிக்கிறது.
நடைமுறையில் நிலைபேறானதன்மை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான மீண்டெழும் தன்மை ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான தூதரகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மதித்தல் ஆகியவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த அடைவு விளங்குகிறது.
இச்சாதனையினை நினைவுகூரும் வகையிலும், டிசம்பர் 14 ஆம் திகதி வரவிருக்கும் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், தூதரகத்தின் அதிநவீன வசதிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் சந்தித்தார்.
கட்டிடத்தின் ஆற்றல் திறன் கொண்ட புத்தாக்க வடிவமைப்பு, உள்ளூர் கூறுகளை உள்ளடக்குதல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் நிலைபேறான செயற்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை இதன்போது தூதுவர் வலியுறுத்தினார்.
“LEED Gold சான்றிதழைப் பெறுவதானது, நிலைபேறான தன்மையினை அடைவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.
“இக்கட்டிடம் ஒரு தூதரகம் என்பதையும் தாண்டி, இலங்கையின் கலாச்சார மற்றும் இயற்கை மரபுரிமைகளை கௌரவிக்கும் அதே வேளை, சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பசுமையான நடைமுறைகள் எவ்வாறு எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பதற்கான ஒரு அடையாளமாக விளங்குகிறது. இலங்கையின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், நாட்டில் 50 ஆவது LEED Gold சான்றிதழ் பெற்ற கட்டிடமாக நிமிர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
“அமெரிக்கத் தூதரகம் LEED Gold சான்றிதழைப் பெற்றமையானது, நிலைபேறான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் போன்றவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம் விளங்குகிறது.
இது எதிர்கால செயற்திட்டங்களுக்கான ஒரு அளவுகோலை நிறுவுவதுடன் இலங்கையில் நிலைபேறான இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான வலுவான பங்காண்மையினை இது பிரதிபலிப்பதுடன் சிந்தனைமிக்க வடிவமைப்பானது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.” என அமைச்சர் பட்டபெந்தி கூறினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகள் பணியகத்தினால் (OBO) முகாமை செய்யப்படும், அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் தூதரக சொத்துக்கள் தொடர்பான துறையானது, புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் LEED Silver சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது.
LEED சான்றிதழைப் பெற்றுள்ள உலகெங்கிலுமுள்ள 63 அமெரிக்க தூதரகங்களுடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இணைகிறது. அவற்றுள் 23 Gold சான்றிதழ்களைப்பெற்றவை. Gold சான்றிதழ்களைப் பெற்றவற்றுள் 17 கட்டிடங்கள் அந்தந்த நாடுகளில் முதன் முதலாக LEED சான்றிதழ் பெற்றவையாகும்.
கட்டிட செயற்திறன் தொடர்பான சிறப்பம்சங்கள்,
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது, இலங்கையின் வளமான கலாச்சாரம் மற்றும் உயிரினப் பல்வகைமையினை வெளிப்படுத்தும் அதே வேளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை மிகவும் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தித் திறன் - காலநிலைக்கு ஏற்ற மேலோடு, ஆழமான கூரை மேலடுக்குகள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் பசுமைக் கூரை என்பன சூரிய வெப்பத்தை குறைப்பதன் காரணமாக கட்டிடத்தை குளிர்விப்பதற்கான எரிசக்திப் பயன்பாட்டைக்
குறைக்கின்றன.
வருடாந்த எரிசக்தி நுகர்வினை 40% குறைப்பதற்கு சோலார் பெனல்கள் பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக
மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது.
நீர் சேமிப்பு - உயர்தர மழைநீர் முகாமைத்துவ அமைப்பு மற்றும் தூதரகத்திற்குள்ளேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு என்பன ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீரை பாசனத் தேவைகளுக்காக மறுசுழற்சி செய்வதன் மூலம் மனித பயன்பாட்டிற்கு உகந்த நீரை
சேமிக்கின்றன.
பசுமையான இடங்கள் - உள்ளூர் சூழலுடன் ஒரு இணக்கமான தொடர்பை உருவாக்குதல் மற்றும் மேலதிக நீர்ப்பாசனத்திற்கான தேவையைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் தூதரக நிலங்கள் இலங்கையின் பூர்வீக மரங்கள் மற்றும்
தாவரங்களை உள்ளடக்கியுள்ளன.
போக்குவரத்து - பணிக்குழுவினர்களுக்கிடையில் துவிச்சக்கர வண்டிகளை பகிர்ந்து பயன்படுத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சித் திட்டமானது, குறுகிய பயணங்களுக்கு மோட்டார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் - செயற்திறனை மேம்படுத்துவதற்காகவும் எரிசக்தி நுகர்வினைக் குறைப்பதற்காகவும், மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் செயன்முறையானது, கட்டிடத்தின் அனைத்து
கட்டமைப்புகளும் வினைத்திறனுடனும் எதிர்பார்க்கப்பட்டவாறும் தொழிற்படுவதை உறுதிப்படுத்துகிறது.
மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்துதல் - பொருட்களுடன் மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களை இணைப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படுகிறது.
குறைவாக உமிழும் பொருட்கள் - குறைவாக உமிழும் வண்ணப்பூச்சுகள், பூச்சுகள் மற்றும் தரை அமைப்புகளைப் பயன்படுத்துவது உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
உலக எரிசக்தி பாதுகாப்பு தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 14 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இது எரிசக்தி நுகர்வினைக் குறைத்து நிலைபேறான ஆற்றல் நடைமுறைகளுக்கு மாற வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூதரகத்தின் LEED Gold அத்தாட்சிப்படுத்தலானது ஆற்றல் சேமிப்பு மற்றும் செயற்திறன் வினைத்திறன்களுக்கான
புத்தாக்க அணுகுமுறைகளுக்கான ஒரு தெளிவான உதாரணமாக விளங்குவதுடன் பசுமையான,மிகவும் நிலைபேறான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொதுவான விழுமியங்களையும் மீளவலியுறுத்துகிறது.