Dec 14, 2024 - 08:51 PM -
0
டுபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கர என்ற "பஸ் லலித்"தின் அச்சுறுத்தல்களால் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல வர்த்தகர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவரது அச்சுறுத்தல் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
"பஸ் லலித்" என்ற நபர் டுபாய் நாட்டிலிருந்து இந்நாட்டில் தனது குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகிறார்.
34 வயதான சந்தேகநபர் 5 கொலைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
இவர்களுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டு கழுதை முகமூடியைப் பயன்படுத்தி ஹங்வெல்ல பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை சமூகத்தில் தீவிரமான விவாதத்திற்கு உள்ளானது.
அதற்குக் காரணம், குறித்த வர்த்தகர் கப்பம் கோரி வழங்கப்படாமையே என்பது தெரியவந்தது.
அத்துடன், கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் வசித்து வந்த வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டமையும் பெரிதும் பேசப்பட்டது.
லலித் கன்னங்கரவுக்கு முதலில் பஸ் வேலை வாய்ப்பை வழங்கிய குறித்த நபரிடமே, கப்பம் கோரி அதனை வழங்காத காரணத்தினால் கொல்லப்பட்டுள்ளார்.
வர்த்தகர்களிடம் கப்பம் கோரி மிரட்டியதுடன், அவர்களை மிரட்டும் குரல் பதிவுகளும் ஊடகங்களில் வௌியாகி இருந்தன.
பஸ் லலித்தினால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக பல வர்த்தகர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களில் பஸ் லலித்தின் ஆலோசனையின் பேரில் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர்.
எனவே, பெரும்பாலானவர்கள் குறித்த பகுதிகளில் இருந்து வௌியேறி தலைமறைவாகி விடுகின்றனர்.
லலித் கன்னங்கரவின் தொடர்ச்சியான கப்பம் அச்சுறுத்தல் காரணமாக "பூரு மூனா"வால் கொல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகரின் சகோதரருக்கு சொந்தமான வீடு மூடப்பட்டு அதன் உரிமையாளர் வெளியேறியுள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு பிரபல வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றும் அதன் உரிமையாளரும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும், தித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் இன்று தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இவரின் அச்சுறுத்தல் காரணமாக மீப்பே பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.