Dec 15, 2024 - 11:01 AM -
0
பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இதனையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து, 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதன்மூலம் பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இப்போட்டியில் அறிமுகமான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அமீர் ஜாங்கே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 83 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்த அமீர் ஜாங்கே ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.
மேலும் இப்போட்டியில் 80 பந்துகளில் சதமடித்த அமீர் ஜாங்கே அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.