Dec 17, 2024 - 07:52 PM -
0
மஹர சிறைச்சாலையில் கைதி கொலை வழக்கை முடித்து வைப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்துள்ள நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சட்டமா அதிபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (17) அறிவித்துள்ளார்.
2020 நவம்பர் 29ஆம் திகதியன்று மஹர சிறைச்சாலைக் கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த PCR சோதனை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு இன்று (17) வெலிசர நீதவான் நீதிமன்றில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு வெலிசர நீதவான் உத்தரவிட்டிருந்த போதிலும், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்காமல் சட்டமா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான காரணிகளை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெளிவுபடுத்தினார்.
பின்னர், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி சேனக பெரேரா காரணிகளை முன்வைத்தார்.
"சட்டமா அதிபரின் அதிகாரங்களை கடக்க நீதவானுக்கு சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த உண்மைகள் குறிப்பிடப்பட வேண்டும். குற்றவியல் சட்டத்தின் 296 இன் கீழ் கொலைக் குற்றத்தைப் பற்றி மட்டுமே சட்டமா அதிபர் வழங்குகிறார். கொலைக் குற்றத்திற்கான உட்பொருட்கள் முழுமையடையாத போதிலும், 298 இன் கீழ் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கான கூறுகளும் இந்த நேரத்தில் நீதிமன்றத்தின் கருத்தாகும். எனினும், இனிமேல் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்ட தரப்பினரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தும் போது, சட்டமா அதிபர் இந்த நீதிமன்றத்தில் எடுத்துள்ள கருத்தையும், இது தொடர்பாக இந்த நீதிமன்றம் வழங்கிய கருத்தையும் பயன்படுத்தவும்."
இரு தரப்பினரின் காரணிகளையும் பரிசீலித்த வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான திறந்த நீதிமன்றில் தனது உத்தரவை அறிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் கைதி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை சட்டமா அதிபரின் நிலைப்பாட்டில் தொடர்வதற்கு நீதித்துறை அதிகாரம் இல்லாத காரணத்தினால் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தீர்மானித்துள்ளார்.