Dec 17, 2024 - 10:45 PM -
0
சட்டவாக்க செயற்பாட்டில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் பாலின சமத்துவம் பற்றிய உணர்திறன் கொண்ட சட்டமூலங்களைத் தயாரிப்பது குறித்த செயலமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் பாகிஸ்தானின் பாராளுமன்ற சேவைகளுக்கான நிறுவனத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளர் ஷஹிதா ரெஹ்மானி தலைமையில் இது நடைபெற்றது.
இந்த செயலமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் சட்டத்தரணி சமிந்திரானி பண்டார கிரிஎல்லே மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச தரங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்பு, பிராந்தியங்களிலிருந்தான சிறந்த நடைமுறைகள், பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் இடைவெளிகளை ஆய்வுசெய்தல், பெண்களுக்கு ஆதரவான சட்டங்களுக்கு அவசியமான அம்சங்கள், சட்டவாக்கத்தின் ஊடாக பாலின சமத்துவத்தை அடைவதற்கான வழிகள் போன்ற விடயங்கள் குறித்து சிறந்த புரிதல்கள் இச்செயலமர்வில் ஏற்படுத்தப்பட்டன.
இச்செயலமர்வில் பொதுநலவாய பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சைனாப் ஜிம்பா, மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினர் அம்சா ரசீட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.