Dec 20, 2024 - 05:21 PM -
0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
அதற்கமைய, 3 போட்டி கொண்ட T20 தொடரில் 3ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டி கேப்டவுனில் நேற்றிரவு நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 329 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக அணித்தலைவர் மொஹமட்் ரிஸ்வான் 80 ஓட்டங்களையும் பாபர் அசாம் 73 ஓட்டங்களையும் கம்ரான் குலாம் 63 ஓட்டங்களையும் சல்மான் ஆகா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்க பந்துவீச்சில் குவேனா மபகா 4, மார்கோ யான்சன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 329 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், ஹென்ரிச் கிளாசென் 97, டோனி டி ஜோர்ஜி 34, டேவிட் மில்லர் 29, வான்டர்டூசன் 23, மார்கரம் 21 ஓட்டங்களைப் பெற, ஏனையவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்படி, 43.1 ஓவரில் 248 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்கா சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.
பந்துவீச்சில் அந்த அணியின் ஷாகின் ஷா அப்ரிடி 4, நசீம் ஷா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கம்ரான் குலாம் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3ஆவது மற்றும் கடைசி போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கிறது.