கிழக்கு
கூட்டமைப்பின் பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டாரே தவிர தமிழரசுக்கட்சிக்கு அல்ல...

Dec 21, 2024 - 05:55 PM -

0

கூட்டமைப்பின் பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டாரே தவிர தமிழரசுக்கட்சிக்கு அல்ல...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டாரே தவிர இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

 

13ஆவது திருத்தச் சட்டம் என்பது மீளப்பெறப்படமுடியாது என்பதை வலியுறுத்தவில்லை. அதனால் சமஸ்டி முறையான கூட்டாட்சி முறைதான் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை தரும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த தீர்வினை எட்டும் வரைக்கும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் சூழ்நிலையினை இந்தியா உருவாக்கவேண்டும். இந்தியா அதற்கான அழுத்ததினை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.


மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியினால் கிளின் சிறிலிங்கா என்னும் ஜனாதிபதி செயலணியானது இலங்கையினை தூய்மைப்படுத்தும் விடயமாக சொல்லப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்க்கும்போது வரவேற்கத்தக்கதாக காணப்படுகின்றது. ஊழல் மோசடிகளிலிருந்து பாதுகாத்து இலங்கையினை தூய்மைப்படுத்தும் திட்டம் என்று சொல்லப்பட்டாலும் கூட ஜனாதிபதியின் செயலாளர் தலைமை தாங்கும் 18 பேர் கொண்ட செயலணியில் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் இணைத்துக்கொள்ளாமை ஏமாற்றத்தினை தரக்கூடியதாகவுள்ளது. கிளின் சிறிலங்கா என்ற செயலணியிலேயே கிளின் இல்லாத சுத்தம் இல்லாத நிலையே காணப்படுகின்றது.


இதற்கு முன்னர் தொல்லியல் ஆணைக்குழு அமைக்கப்படும்போது ஒரு சிறுபான்மை பிரதிநிதியும் உள்ளடக்கப்படவில்லையென்பது கடந்த பொதுஜன பெரமுன ஆட்சிக்காலத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதில் பௌத்த துறவிகளும் இராணுவத்தினருமே உள்வாக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த கிளின் சிறிலங்கா சிறுபான்மையினத்தவர்கள் உள்வாங்கப்படாமை என்பது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளின் செய்வதற்காக வந்த உங்களின் குழுவிலேயே கிளின் இல்லாத நிலையுள்ளதனால் பல்லினம் சமூகம் இடம்பெறவில்லையென்றால் அது ஒரு பாரபட்சமான பக்கச்சார்பான அமைப்பாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அது தொடர்பான அமைச்சருக்கும் சுட்டிகாட்டுகின்றோம்.


மாகாணசபை, உள்ளுராட்சிசபை தேர்தல்களை நடாத்துவது குறித்து ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை வரவேற்கின்றோம். நீண்ட காலமாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படாத நிலையும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2013ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்படாத நிலையும் காணப்படுகின்றது. ஜனநாயக ரீதியான மக்கள் பிரதிநிதிகளைக்கொண்டதாக மாகாணசபையும் உள்ளுராட்சி சபைகளும் இருக்கவேண்டும். ஆளுனரோ, ஆணையாளரோ அதிகாரம் செலுத்தும் சபைகளாகயிருந்தால் அது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகயிருக்கும்.


இதேபோன்று ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது 13ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 13ஆவது திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும். 13ஆவது திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்த 13ஆவது திருத்த சட்டம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். 13ஆவது திருத்த சட்டம் இருக்கும்போதே காணிகள் அபகரிக்கப்படுகின்றன. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் வலக்கையால் வழங்கப்பட்டு இடக்கையினால் பிறித்தெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


13ஆவது திருத்த சட்டம் என்பது மீளப்பெறப்பட முடியாது என்பதை வலியுறுத்தவில்லை. அதனால் சமஸ்டி முறையான கூட்டாட்சி முறைதான் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை தரும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த தீர்வினை எட்டும் வரைக்கும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் சூழ்நிலையினை இந்தியா உருவாக்கவேண்டும். இந்தியா அதற்கான அழுத்ததினை வழங்கவேண்டும். ஒரு சர்வதேச ஒப்பந்தமாக காணப்படும் விடயத்தினை திடீரென தூக்கியெறிய முடியாத நிலையுள்ளது.


இதேநேரம் தேசிய மக்கள் சக்தி ஒரு புதிய அரசியல் யாப்பினை கொண்டுவருவதாக கூறுகின்றது.அந்த அரசியல் யாப்பு என்பது மாகாணசபையில் காணப்படும் குறைபாடுகளை அகற்றும் வகையிலும் நிலையான தீர்வொன்றை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் கூட்டாட்சி முறையினை அடிப்படையாக கொண்டு இருக்குமானால் அது வரவேற்கத்தக்கதாக அமையும்.தமிழர்கள் பூர்வீகமாக வாழும் வடகிழக்கு பிரதேசங்கள் என்பன ஒரு அலகாகசெயற்;படக்கூடிய ஒரு அரசியல் செயற்பாடும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.அவ்வாறு இல்லாது கடந்தகாலங்களில் மரபு ரீதியாகவந்த பேரினவாத அரசுகள் என்ன செயற்பாடுகளை முன்னெடுத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசுக்கும் ஏற்படும்.


கிளின் சிறிலங்கா விடயத்தில் பொருளாதார குற்றவாளிகளை மாத்திரம் கருத்தில்கொண்டதாக இருக்ககூடாது.அரசியல் ரீதியாகவும் மனித உரிமைகள் ரீதியாக தவறிழைத்தவர்களையும் தண்டிக்ககூடியதாக அது இருக்கவேண்டும்.
கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்டஊடகவியலாளர்கள், அரசியல்தலைவர்கள், கல்வியியலாளர்கள் தொடர்பில் நாங்கள் அட்டவணைப்படுத்தியிருந்தோம்.


ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் சட்டவாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதுபலமாக இருக்கவேண்டும்,சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று கூறியிருந்தார். கடந்த ராஜபகஷர்களின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் என்பது மலினப்படுத்தப்பட்ட மிகவும் இழிவான நிலைக்கு தள்ளப்பட்ட சூழ்நிலை காணப்பட்டது.
கடந்த காலத்தில் நாட்டின் முக்கியஸ்தர்கள் பலர் சிலரின் அரசியல் தேவைக்காகவும் சுயதேவைக்காகவும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகளை தண்டிக்ககூடிய சூழ்நிலையினை காவல்துறை உருவாக்கவேண்டும். இல்லையென்றால் தேசிய மக்கள் சக்தியை கூட கேள்விக்கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.


ஊடகப் பேச்சாளர் என்ற பணி பாராளுமன்றக் குழுவினால் தானாகத் தரப்பட்ட பணி அது. கடந்த வவுனியா கூட்டத்தின் போது ஊடகங்கள் என்னையும் சந்தித்தார்கள். முன்னாள் எம்.பி அவர்களையும் சந்தித்தார்கள். இதன்போதும் நான் ஊடகங்களுக்குத் தெளிவு படுத்தியிருந்தேன்.


ஆனால் அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது உண்மை. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியதன் பின்னர் அது முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நான் செய்கின்றேன். அது பற்றியே என்னால் கூற முடியும் மற்றைய விடயத்தை எமது மத்திய குழுவும் பாராளுமன்றக் குழுவுமே அது பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.
கட்சிக்குள் வழக்குத் தாக்கல் என்ற விடயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. கடந்த பொதுச்சபையில் தலைவர் தெரிவின் போதும் ஒரு வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. அது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள விடயம் ஆதலால் அது தொடர்பில் கருத்துச் சொல்ல முடியாது. அந்த வழக்குத் தாக்கலைத் தொடர்ந்து அதன் பின்னர் எடுக்கப்படுகின்ற முடிவுகளிலே முரண்பாடுகள் வருகின்ற போது அதனை முன்மாதிரியாகக் கொண்டு சிலரும் தமது பக்க நியாயத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை காணப்படுகின்றது.


இந்த விடயங்களைப் பொருத்த மட்டில் வழக்குத் தாக்கல் செய்வது என்பதை விட கட்சி மட்டத்திலேயே பேசி தீர்வு காண்பது உகந்ததாக இருக்கும். ஒரு சாரார் வழக்கை நாடும் போது மற்றைய சாராரும் தங்கள் மீது விரல் நீட்டப்படுவதைத் தடுக்கு முகமாக சட்டத்தை நாட வேண்டி வருகின்றது. சிலர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள் இதனால் தா தற்போதைய நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.


கடந்த தேர்தலில் ஏற்பட்ட குறைபாடுகள், வேட்பாளர் தெரிவுக்குழு செய்த குறைபாடுகள் காரணமாக வடமாகாணத்தில் எமக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் கிடைக்க வேண்டு ஐந்து ஆறு ஆசனங்கள் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இதற்கான காரணம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.


மாறி மாறி குற்றங்களை முன் வைக்காமல் சுயாதீனக் குழுவொன்றை அமைத்து வட மாகாணத்தில் ஆசனங்கள் குறைந்தமைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மாறாக என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இன்னுமொருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறிவுபூர்வமானதாகவும், நியாயமானதாகவும் இருக்காது.


வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிங்கள தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தமிழரசுக் கட்சியைப் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு மக்கள் அதிகளவிலான வாக்குகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது தமிழரசுக் கட்சி பெற்றுள்ள வாக்குடன் ஒப்பிடுகையில் கனிசமான அளவு வாக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.


இதில் எங்கு பிழை நடந்திருக்கின்றது, எமது தீர்மானங்களில் ஏதும் தவறுள்ளதா என்பது குறித்தி சர்சைக்குரியவர்கள் நியாயங்களைச் சொல்லாமல் சுயாதீனக் குழு மூலம் இதற்கான விடயங்களைக் கண்டு அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05