Dec 26, 2024 - 11:16 AM -
0
கோட்டாபய அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையினை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜோசப்பரராஜசிங்கம் விடுதலையான விடயத்தில் அசாத் மௌலான கூறிய விடயங்களை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் இந்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்ததுடன் சிவஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள்,அருட்தந்தை க.ஜெகதாஸ் அடிகளார் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவின் 19 ஆவது நினைவு தினத்தினை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியினர் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர்.
கடந்த கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதிகிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையினையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.
ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான் அவர்கள் கோட்டாபய ராஜபக்ஸவின் காலப்பகுதியில் விடுதலைசெய்யப்பட்டார். பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை சொல்லியிருந்தார்.
அது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சியொன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பிள்ளையான் விடுதலை செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு சிலரை இடமாற்றினார்கள் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டது.
அன்று நீதி அமைச்சராகயிருந்த அலிசப்ரியின் வழிகாட்டலில்தான் நடைபெற்றது என்று சொல்லப்பட்டது.பிள்ளையான் அவர்களை விடுதலைசெய்ததன் காரணமாக கோத்தபாய ஆட்சியில் எங்களுக்கு நீதிகிடைக்கும் என்று நம்பவில்லை.
ஆனால் இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய்வதாகவும் அந்த விசாரணைபட்டியலில் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் பெயர் உள்வாங்கப்படவில்லை.
இலங்கையின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையினை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.
குற்றப்புலனாய்வுத்துறையானது பிள்ளையான் விடுதலைசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும். ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் உள்ளார்கள்.
அவர்களை மீண்டும் விசாரணைசெய்து ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலைக்கு மட்டுமல்லாமல் வடகிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டும் என தெரிவித்தார்.
--