Dec 29, 2024 - 10:53 AM -
0
கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறித்த பெரஹெர இன்று (29) இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெரஹெர நிகழ்வானது கொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையில் இருந்து ஆரம்பமாகி கொஸ்கம, பூகொட வீதியில் கனம்பெல்ல சந்தி வரை பயணித்து, கனம்பெல்ல சந்தியிலிருந்து வலப்புறம் திரும்பி கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் கடுகொட சந்தி வரை சுமார் 800 மீற்றர் பயணித்து மீண்டும் விகாரையை வந்தடையும்.
எனவே, பெரஹெர நிகழ்வின் போது பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
கொழும்பில் இருந்து அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு கொஸ்கம கலுஅக்கல சந்தியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வலதுபுறமாக லபுகம வீதியில் 12 கிலோமீற்றர் பயணித்த பின் தும்மோதர சந்தியில் இடது புறமாக திரும்பி தும்மோதர - அவிசாவளை வீதியில் 8 கிலோமீற்றர் பயணித்த பின்னர் புவக்பிட்டிய சந்தியில் வலதுபுறம் திரும்புவதன் ஊடாக பிரதான வீதிக்குள் பிரவேசிக்கலாம்.
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பஹனலங்க பிரதேசத்தில் வலது புறமாக எஸ்வத்த-கிரிந்திவெல வீதியில் 8 கிலோமீற்றர் வரை பயணித்து, பின்னர் கிரிந்திவெல-கொழும்பு பிரதான வீதியில் பயணிக்க முடியுமென பொலிஸர் தெரிவித்தனர்.