Dec 30, 2024 - 12:31 PM -
0
நடப்பு பார்டர் கவாஸ்கர் கிண்ண தொடருக்கான அணியில் நிதிஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்த போது நிறைய பேருக்கு அவரைப் பற்றி தெரியாது. ஏதோ ஐபிஎல் ஆடுபவர் என்ற அளவில்தான் அவரைத் தெரிந்திருந்தது.
ஆனால், இப்போது இந்திய அணியின் முக்கியமான நம்பர் 8 வீரர் ஆனார் நிதிஷ். இருப்பினும் இன்னும் நிறைய மேம்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
21 முதல் தரப் போட்டிகளையே ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த நிதிஷ் குமார், மெல்பர்னில் மறக்க முடியாத சதம் எடுத்து நட்சத்திர பேட்டராக உருவாகியுள்ளார். ஆனால், ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக அவரது பந்து வீச்சு மேம்பட வேண்டும். இந்நிலையில், நிதிஷ் குமார் கூறியதாவது:
சிலர் என் திறமை மீது ஐயம் கொண்டிருந்தனர் என்பதை அறிவேன். அதாவது இளம் வீரர், ஐபிஎல் ஆடுபவர் பெரிய டெஸ்ட் தொடரில் இவரால் சரியாக ஆட முடியுமா? இப்படித்தான் பலரும் நினைத்தார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கூறியது தவறு என்று நிரூபித்துள்ளேன். அவர்களுக்கு தாங்கள் பேசியது தவறு என்று தெரியவேண்டும்.
இந்திய அணிக்காக நூறு சதவீத அர்ப்பணிப்பை அளிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதை என்னை விமர்சித்தவர்கள் தெரிந்து கொள்ளட்டும். சதம் எடுத்தக் கணம் எனக்கு ஒரு நன்றி மிகும் தருணமாக அமைந்தது. விராட் கோலியை சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். அவரைத்தான் என் லட்சிய ஆளுமையாகக் கொண்டுள்ளேன். இப்போது அவருடனே விளையாடுகிறேன்.
பெர்த் டெஸ்ட்டில் அவர் சதம் எடுக்கும் போது நான் ரன்னர் முனையில் இருந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது என் சதத்திற்கு அவர் என்னிடம் வந்து நன்றாக ஆடினாய் என்று பாராட்டினார். அவர் பாராட்டும் இந்தக் கணத்துக்காகக் காத்திருந்தேன் கடைசியில் என் கனவு நிறைவேறியது.
சிராஜ் கடைசி பந்தைத் தடுத்தாடிய போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆவேசமடைந்தனர். என் சதத்துக்குக் கூட அவ்வளவு சப்தம் எழுப்பவில்லை. சிராஜ் டிபன்ஸுக்கு அத்தனை மகிமை. என் சதத்துக்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.
போலண்ட் சிறந்த பவுலர், சீராக வீசுவார். அவரது லைன் மற்றும் லெந்த்தை கொஞ்சம் தொந்தரவு செய்தால் தான் ஆட முடியும். நான் கிரீசிலிருந்தே ஆட வேண்டும் என்பதல்ல, கொஞ்சம் முன்ன பின்ன நகர்ந்து பவுலரின் லெந்த்திற்குத்தக்கவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்வேன்.
ஒரு ஆல்ரவுண்டராக வேண்டும் என்பது தான் என் விருப்பம். ஆனால், அதற்கு இன்னும் என் பவுலிங்கில் பெரிய மேம்பாடு தேவைப்படுகிறது. என் பவுலிங் மீது எனக்கு திருப்தி இல்லை. பவுலிங்கிலும் மீண்டு எழுவேன், வரும் நாட்களில் முழு ஆல்ரவுண்டராக வளர்ச்சி பெறுவேன்.
கடந்த 2 - 3 ஆண்டுகளாக என் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் பெரிய அளவு உழைப்பை இட்டு வருகிறேன். உடல் தகுதியும் முக்கியமானது. இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.