Dec 30, 2024 - 04:16 PM -
0
புகழ்பெற்ற வர்த்தக பிரமுகரான கஸ்தூரி செல்லராஜா வில்சன், OrphanCare இன் காப்பாளர் சபை அங்கத்தவர்களில் ஒருவராக அண்மையில் இணைந்தார். அநாதரவான சிறுவர்கள் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து வயது வந்த பருவத்தை எய்தும் நிலையில், தமது வாழ்வில் இரண்டாவது கைவிடப்படலை தவிர்த்துக் கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமாக OrphanCare அமைந்துள்ளது. சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 2ஆம் ஆக்கத்தை பின்பற்றி செயலாற்றும் OrphanCare இனால் சகல சிறுவர்களும் தமது இனம், மதம், நிறம் அல்லது தேசியம் ஆகிய பாகுபாடின்றி இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னணி சக்தியூட்டும் பான வகையான 5-hour International Corporation இன் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக கஸ்தூரி தற்போது செயலாற்றுகின்றார். இலங்கையின் பொதுப் பட்டியலிடப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் கீர்த்தி நாமத்தை கஸ்தூரி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன், 2024 மார்ச் மாதம் வரை இந்த நிலையில் அவர் தொடர்ந்திருந்தார்.
இவர் தற்போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதுடன், முன்னர் இலங்கை பணிப்பாளர் கல்வியம், CIMA ஸ்ரீ லங்கா மற்றும் இலங்கை அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் அங்கம் வகித்திருந்தார். கஸ்தூரி விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், வலைபந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், 1989 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தலைமைத்துவமளித்திருந்தார். பின்னர் இலங்கை தேசிய விளையாட்டு பேரவையின் அங்கத்தவராக அவர் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித நேய அடிப்படையில், யுனிசெப் வணிக பேரவையில் கஸ்தூரி அங்கம் வகிப்பதுடன், இதில் சிறுவர் உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில் முக்கிய அங்கம் பெற்றுள்ளார். தற்போது OrphanCare இன் காப்பாளராகவும் இணைந்துள்ளார். ஹேமாஸ் நிறுவனத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், பியவர முன்பள்ளிகள், Ayati மற்றும் எகசே சலகமு (ஒருமித்தவர்களாக நடத்துவோம்) போன்ற ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தின் பல மனித நேயத் திட்டங்களை முன்னெடுப்பதில் கஸ்தூரி முக்கிய பங்காற்றியிருந்தார்.
OrphanCare காப்பகத்தின் காப்பாளர்கள் சபையில் கஸ்தூரி செல்லராஜா இணைந்து கொண்டமை தொடர்பில் OrphanCare காப்பகத்தின் காப்பாளர் ருஸ்லி ஹுஸைன் கருத்துத் தெரிவிக்கையில், “காப்பாளர் சபைக்கு கஸ்தூரி செல்லராஜாவை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அநாதரவான சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் எமது பணியில், கூட்டாண்மை மற்றும் சமூக பிரிவுகளில் இவர் கொண்டுள்ள ஆழமான பெறுமதி வாய்ந்த அனுபவம் எமக்கு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருக்கும். சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் கஸ்தூரியின் அர்ப்பணிப்பானது, எமது பெறுமதிகளுடன் சிறந்த முறையில் பொருந்துவதாக அமைந்திருப்பதுடன், OrphanCare இன் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதற்கு முக்கியமானதாக அமைந்திருக்கும்.” என்றார்.
கஸ்தூரி செல்லராஜா வில்சனின் நியமனத்துடன், OrphanCare காப்பாளர்களில் அடங்கியிருப்போர்: காப்பகத்தின் தவிசாளர் ருஸ்லி ஹுசைன் (இலங்கையின் ரொட்ராக்ட் அமைப்பின் ஸ்தாபகர்), காப்பகத்தின் பொருளாளர் ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (முன்னாள் AAT தலைவர்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி), கே.ஆர். ரவீந்திரன் (தவிசாளர், அமெரிக்க ரொட்டரி மையம் தவிசாளர் மற்றும் ரோட்டரி இன்டர்நஷனல் முன்னாள் தலைவர்), ஷரத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), தேசபந்து திலக் டி சொய்ஸா (தவிசாளர் ஹெல்பேஜ் இன்டர்நஷனல்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கி ஸ்தாபக தவிசாளர்), தியாப் அக்பராலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அமானா வங்கி) ஆகியோர் அடங்கியுள்ளனர். உயர் மட்ட நேர்த்தியை பேணுவதற்கும், காப்பகத்தின் நீண்ட கால நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கும் காப்பாளர்களால் உறுதியான ஆளுகை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமானா வங்கியை ஸ்தாபக அனுசரணையாளராகக் கொண்டுள்ள OrphanCare, அநாதரவான சிறுவர்களை அரவணைத்து வழிநடத்தும் சூழலை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் இரண்டாவது தடவையாகவும் அநாதரவாக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் செயலாற்றுகின்றது. இந்த காப்பகத்தின் சகல நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகளையும் அமானா வங்கி முழுமையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த காப்பகத்துக்காக நன்கொடை வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் சம்பந்தப்பட்ட அனுகூலம் பெறுவோரை சென்றடைவதை அமானா வங்கி உறுதி செய்கின்றமை விசேட அம்சமாகும். இதுவரையில் OrphanCare இல் 3000 க்கும் அதிகமான அநாதரவானவர்கள் நாடு முழுவதிலும் காணப்படும் 90 க்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.
OrphanCare பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் www.orphancare.org எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 011 775 6 775 ஊடாக தொடர்பு கொள்ளவும்.