Dec 30, 2024 - 05:42 PM -
0
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், இரத்தினபுரி நீதவான் பரனாலியனகேவால் குறித்த பிணை இன்று (30) வழங்கப்பட்டுள்ளது.
50, 000 ரூபா மற்றும் தலா 50 இலட்சம் பெறுமதியான 3 சரீரப் பிணைகள் என நிர்ணயித்த நீதவான், குறித்த நபர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை மற்றும் சாட்சிகளின் தலையீட்டை தடை செய்த நீதவான், வழக்கை ஜனவரி 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
14 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் முறைப்பாட்டாளரிடம் ஒருதலைப்பட்சமாக சொத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.