செய்திகள்
வீதி விபத்துக்களில் 4 பேர் பலி

Dec 31, 2024 - 11:04 AM -

0

வீதி விபத்துக்களில் 4 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 04 வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

 

நேற்று (30) தெஹியந்தர, கலேவெல, நால்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

 

ஹக்மன – முலட்டியன வீதியின் பல்லாவல வித்தியாலயத்திற்கு அருகில் பேருந்து ஒன்று முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேருந்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் தெஹியந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

மாத்தறை கொம்பத்தல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியின் தலகிரியாகம பிரதேசத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை மீரிகம கிரியுல்ல வீதியின் லோலுவாகொட பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

லோலுவாகொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 

எழுகொட - பமுனுவ வீதியின் தொடம்வலபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் சென்றவர் படுகாயமடைந்துள்ளதுடன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

 

பின்னால் சென்றவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05