Dec 31, 2024 - 12:02 PM -
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (30) வரலாற்றில் முதன்முறையாக முழுநாள் கூட்டமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் கூட்டமாகவும் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் இடம் பெற்ற.குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீPகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன் தலைமையில் நேற்று மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலோயே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
--