Dec 31, 2024 - 12:36 PM -
0
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், ஆபாசமான முறையில் கொண்டாடி 150 கோடி இந்திய மக்களை அவமானப்படுத்தி விட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் ரிஷப் பண்ட், டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் தேவையில்லாத ஒரு ஷார்ட் அடித்து கேட்ச் ஆனார். அப்போது டிராவிஸ் ஹெட், ஆபாசமான முறையில் ஒரு செய்கை செய்தார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, டிராவிஸ் ஹெட்டின் இந்த கீழ்த்தரமான செயல் கண்டிக்கத்தக்கது.
ஜென்டில்மேன் விளையாட்டு என்ற பெயரை கெடுக்கும் அளவுக்கு டிராவிஸ் ஹெட் செய்திருக்கிறார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த போட்டியை பார்க்கிறார்கள். அவர்களுக்கு முன் ஒரு மோசமான முன் உதாரணத்தை டிராவிஸ் ஹெட் செய்து காட்டி விட்டார். இது தனிப்பட்ட நபருக்கு எதிரான அநாகரிக செயல் கிடையாது.
150 கோடி இந்தியர்களை ஹெட் அவமானப்படுத்தி விட்டார். ஹெட் மீது ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினர் நலனை கருதி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மற்ற நபர்கள் இதை பின் தொடர மாட்டார்கள் என்று நவ்ஜோத் சிங் தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்,
எப்போதெல்லாம் விக்கெட் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் இதை செய்வார். இது ஒரு நகைச்சுவைக்காக செய்யப்பட்ட செயல். அவர் தன்னுடைய கைவிரல் சூடாக இருக்கிறது. இதனால் நான் ஐஸ்கோப்பையில் என் விரலை விடப் போகிறேன் என்பதை தான் அவர் சைகையாக காட்டினார்.
ஏற்கனவே விக்கெட் எடுக்கும் போது நாதன் லயனுக்கு முன் அவர் இவ்வாறு செய்து வெறுப்பேற்றுவார். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.