Dec 31, 2024 - 04:53 PM -
0
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமானசேவை நிறுவனமான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் துபாய்க்கிடையே மேலதிக திட்டமிடப்பட்ட சேவையை 2025 ஜனவரி 2 முதல் நடத்தவுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, EK654/655 விமானமானது விமானப் பாதையில் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிப்பதுடன் மற்றும் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கவுள்ளது. மேலதிக விமான சேவையானது 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு தடவை நடத்தப்படவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 1, 2025 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்த விமான சேவையானது இடம்பெறவுள்ளது.
இந்த புதிய மேலதிக சேவைக்கான விமானத்தில் 360 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். முதல் வகுப்பில் எட்டு ஆசனங்கள், வர்த்தக வகுப்பில் 42 ஆசனங்கள் மற்றும் பொருளாதார வகுப்பில் 310 இருக்கைகள் என்ற ரீதியில் முதற்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கவுள்ளது.
2025 மற்றும் 2030 க்கு இடையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்ய எதிர்பார்த்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது உற்சாகமான தருணம் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான எமிரேட்ஸின் வதிவிட முகாமையாளரான ரஷித் அல் அர்தா தெரிவித்தார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்த ஒரு விமானசேவை நிறுவனமாக, தொழில்துறையின் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்க எமிரேட்ஸ் உறுதி பூண்டுள்ளது, மேலும் இந்த மேலதிக விமான சேவையானது நாட்டின் சுற்றுலா இலக்குகளுக்கு நாம் பங்களிக்கவுள்ளமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எமிரேட்ஸ் 1986 ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்ததுடன் மற்றும் பயணிகள் மற்றும் சரக்குகள் சேவைகளுடன் நாட்டின் சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. விருது பெற்ற இந்த விமான சேவையானது, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளது.